வரலாற்றுக்கு ஒரு பாடம் - ஈரோடு தமிழன்பன்
கிழித்து எறிவோம்!
கேவலமானவை
வரலாற்றின்
இந்தப் பக்கங்கள்...
எங்கெங்கும்
கோலேந்திகளின் இரத்தவெறிக்குப்
பலியான பாமரர்களின்
பகல்களும் இரவுகளும்
இதோ
இந்தப் பக்கங்கள்மேல்
கடிவாளம் பூட்டாத நெருப்பை
ஏவிவிடுவோம்!
குருபீடங்கள் பரப்பிய
முடைநாற்ற மூடப் பிணிகளால்
அறத்தின்
செல்லரித்த நரம்புகளும் எலும்புகளும்
குவிந்து கிடக்கின்றன.
விரல்களில் துடிக்கும்
ஆத்திரத்தை
விடுதலை செய்வோம்..
இங்கு இன்னும் ஓயவில்லை
சந்தர்ப்பவாதிகளின்
சதுரங்க ஆட்டத்தில்
வெட்டுப்பட்ட
அரசியல் நெறிமுறைகளின் கடைசி
அலறல்!
இனி
தோற்கடிக்கப்பட்ட
நியாயங்களி வாக்குமூலத்திலிருந்து
தொடங்குவோம் வரலாற்றை.
சரித்திரத்திற்கு உரிய
அசல் மனிதர்களின்
அடையாளங்களைத்
தேர்ந்தெடுக்கும்படி
கட்டளை போடுவோம்
முதல் அத்தியாயத்திற்கு.
பதவி வெறிகளால்
கடித்துக் குதறப்பட்ட
பண்பாட்டு அரசியலின்
காயங்களின்
கரைகளிலிருந்து
வார்த்தைகளைச் சேகரம் செய்யட்டும்
வாக்கியங்கள்.
எடுபிடியாகித்
தலைவர்களின் வீட்டுவாசலில்
வாலைக் குழைத்தது போதும்!
வரலாறு இனி
வாழத்துடிக்கும் மானுடனின்
மீட்சிப் போராட்டத்தின்
சாட்சியம் ஆகட்டும்! VII
0 comments:
Post a Comment