பச்சை நெருப்பு - ஈரோடு தமிழன்பன்
மரத்திடமிருந்து
என்ன இரகசியங்களைக்
காற்று கைப்பற்றியது
இந்த
அதிரடிச் சோதனையால்?
வேர்கள்
வெளியிட்டிருக்கும்
அவசர அறிக்கை
தெரிவிப்பதென்ன?
உச்சிவரையில்
பற்றி எரிகிறது
பச்சை நெருப்பு! அதை
உச்சரிக்கும்
எனது ஓசை மீதும்
பற்றிவிட்டது.
பூக்களே இல்லை...
எல்லாம் உதிர்ந்து விட்டன
என் கவிதை மடியில்...
சந்தேகம் இருந்தால்
இந்த வாக்கியங்கள் பக்கம்
உங்கள்
மூக்கை அனுப்பலாம்!
வரம் கேட்டு
நீளும் கிளைக்கரங்களில்
இயற்கை,
என்னையே சில
மழைத்துளிகளாய்
மாற்றிக் கொடுக்கட்டும்
எனக்குச் சம்மதம்!
ஓடி வந்த காற்று,
மரத்தின்
உள்ளங்கையை நீவிவிட்டு
ரேகை பார்க்கிறதோ?
மரத்தின் படம் அல்ல
இது
மரத்தின் மடியில் உட்கார்ந்து
காற்று
எடுத்துக்கொண்ட படம்! VII
0 comments:
Post a Comment