வையகவாழ்வின் தெய்வீகத்தன்மையை, மனிதப்பிறவியின் புனிதத்தை தௌ;ளத்தெளிவாக விளக்கிக் காட்டுபவர்கள் நம் குழந்தைகள். அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும் அழகு பளிச்சிடுகிறது.
அவர்களுடைய மழலைமொழி நம்முடைய மனத்திலே பேரானந்தத்தைச் சொரிகிறது அவர்களுடைய கொவ்வை இதழ்ச்சிரிப்பும், குறும்பும் கொண்டாட்டமும்,
குதூகலிப்பும் நம்முடைய கண்களுக்கும் கருத்துக்கும் பெருவிருந்தாய் இருக்கின்றன.
அவர்களைப் பார்க்கும் பொழுது:
மண்ணில் உலாவரும் வெண்ணிலாவே!
கண்ணைக் கவர்ந்திழுக்கும் கவின் மலரே!
எண்ணத்தில் எழுந்திடும் இன்பஊற்றே!
வண்ணக்களஞ்சியமே! வாழ்வின் பெரும்பேறே!
என்று பரவசமடைந்து பாராட்டுகின்றோம்.
குழந்தைகள் ஆண்டவனின் வடிவங்கள். அன்பு நம்பிக்கை அமைதி ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைப்பதற்காக ஆண்டவன் அவர்களை அனுப்பிவைத்திருக்கிறான்.
என்று அமெரிக்க கவிஞர் James Russell Lowell கூறியுள்ளார்.
சின்னஞ்சிறு கிரகங்கள் சூரியனுக்கு மிக அருகே இருப்பதைப்போன்று சின்னஞ்சிறு குழந்தைகள் இறைவனுக்கு மிக அருகாமையில் இருக்கிறார்கள் என்பது ஜேர்மனிய நாவலாசிரியர் Jean Paul Richter அவர்களின் மணிமொழியாகும்.
குழந்தைகள் கடந்த காலத்தை நினைத்து வருந்துவதில்லை. எதிர்காலக் கற்பனையில் வீணாக மிதப்பதில்லை. நிகழ்காலத்திலேயே வாழ்கிறார்கள். அதனையே அநுபவிக்கிறார்கள்.
கடந்தகாலம் திரும்பி வராது. எதிர்காலம் உறுதியானதல்ல. நிகழ்காலமே நிச்சயமானது.
எனவே நிகழ்காலத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்டு செயற்படுவதே அறிவுடமை.
உலகெங்கும் பெரும் எண்ணிக்கையில் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பல்வேறு மொழிகளைப் பேசி வேறுபட்ட ஆடைகளை அணிந்து புறத்தோற்றத்தில் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே விதமானவர்களே! அவர்கள் கூடி விளையாடி சண்டைபோட்டு பின் சேர்ந்துகொள்வார்கள். அவர்கள் தங்களுக்குள் வேற்றுமை கொள்வதில்லை. அவர்கள் தங்கள் பெற்றோர்களை விட ஞானமுடையவர்கள். அவர்கள் வளரும் போது துரதிஸ்டவசமாக மூத்தோருடைய முறையற்ற போதனைகளாலும் நடத்தைகளாலும் அவர்களின் இயற்கைஞானம் மங்கி விடுகிறது. பள்ளியில் அவர்கள் பயனுடைய பல விடயங்களை கற்றுக்கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அன்போடும் மனிதாபிமானத்தோடும் வாழ்ந்து வாழ்க்கையை தமக்கும் மற்றவர்களுக்கும் பயனுடையதாக ஆக்கிக்கொள்வதே அடிப்படையான விடயம் என்பதை அவர்கள் நாளாவட்டத்தில் மறந்து விடுகிறார்கள்.
இன்றைய அரும்புகள் நாளைய மலர்கள்; இன்றைய குழந்தைகள் நாளைய குடிமக்கள். அவர்களைச் சிறந்த முறையில் வளர்க்க வேண்டியது நமது தலையாய கடமையாகும். குழந்தைகளை நல்லவர்களாக்குவதற்கு சிறந்த வழி அவர்களை மகிழ்ச்சியாய் இருக்கச்செய்வதே ஆகும். (சிந்தனைக் கோவையிலிருந்து..)
Read more...